வடமதுரையில் தொடரும் வெடிச்சத்தம் காரணம் தெரியாததால் குழப்பம்
வடமதுரை,:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சுற்று வட்டாரப்பகுதியில் நேற்று மதியம் 1:36 மணிக்கு பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ஆனால் இதற்கான காரணம் தெரியாததால் மக்கள் குழப்பம், பதட்டத்தில் உள்ளனர்.வடமதுரை ,வேடசந்துார், சாணார்பட்டி பகுதியில் சில மாத இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்திலிருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போலவே இருக்கிறது இந்த மர்ம சத்தம். ஒவ்வொரு வெடிச்சத்தத்திற்கு பின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்போர் அலைபேசி மூலம் அருகிலிருக்கும் தெரிந்தவர்களுடன் பேசுவதன் மூலம் 20 முதல் 30 கி.மீ., சுற்றளவில் இந்த சத்தம் கேட்பது உறுதியாகிறது.பல முறை கடும் அதிர்வும் சில பகுதிகளில் உணர முடிகிறது. அலமாரிகளில் இருக்கும் எடை குறைந்த பொருட்கள் கீழே விழவும் செய்கின்றன. பழைய கட்டடங்களில் விரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற பலத்த வெடிச்சத்தம் கேட்கிறபோதிலும் இதற்கான காரணம் கல்குவாரி பணியா அல்லது வேறு காரணமான என மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் தெளிவாக வெளியிடப்படாததால் மக்களிடம் குழப்பம் , பதட்டம் நீடிக்கிறது.