நிதிநிறுவன அதிபரை கொன்று உடலை அட்டைப்பெட்டியில் வைத்த சம்பவம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் நிதி நிறுவன அதிபரை கொலை செய்து உடலை அட்டைப்பெட்டியில் வைத்து ரோட்டில் வீசிச்சென்ற சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்-பழநி பைபாஸ் ராமையன்பட்டி தரைப்பாலத்தின் அருகே ஜூன் 18 ல் அட்டைப்பெட்டியில் கை, கால்கள் நைலான் கயிறால் கட்டப்பட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது. தாலுகா போலீசார் விசாரித்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க எஸ்.பி.,பிரதீப் உத்தரவில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் அட்டைப்பெட்டிக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஆர்த்தி தியேட்டர் ரோடு வ.உ.சி.,நகரை சேர்ந்த குபேந்திரன் 58 ,னவும், பைனான்ஸ் நிறுவனம் நடத்திய அவர் சில ஆண்டுகளாக அந்த தொழிலைவிட்டு தோட்ட வேலைகளை கவனித்து வந்ததும் தெரிந்தது. மூவர் கைது
அலைபேசி எண், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை வைத்து ஆய்வு செய்ததில் சந்தேகத்தின்பேரில் திண்டுக்கல் என்.எஸ்.நகர், முனியப்பன் கோயில் தெருவைச்சேர்ந்த கண்ணன் 54, குரும்பப்பட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி 59, திருப்பூர் மாவட்டம் அவிநாசி மடத்துப்பாளையத்தை சேர்ந்த பிரியா 26, ஆகிய மூவரிடம் விசாரணை நடந்தது. இதில், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து குபேந்திரனை தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்து இறந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க உடலை அட்டைப்பெட்டியில் கட்டி லோடு ஆட்டோ மூலம் எடுத்துவந்து ராமையன்பட்டி தரைப்பாலம் அருகே வீசி சென்றதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து 3பேரையும் கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.