| ADDED : நவ 20, 2025 05:42 AM
மாவட்டத்தில், கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட கோடை சுற்றுலாத்தலங்களும், பழநி, பாதாள செம்பு முருகன்கோயில், திருமலைக்கேணி முருகன் கோயில், சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆன்மிக சுற்றுலாத்தலங்களும் அதிகம் உள்ளன. இவ்விடங்களில் அடிப்படை வசதி குறைப்பாடால் சுற்றுலா பயணிகள் அசவுகரியத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் தாண்டிக்குடி, பன்றிமலை, பூம்பாறை, பெப்பர் அருவி உள்ளிட்ட அதிகம் வெளி தெரியாத இடங்களும் ஏராளம் உள்ளன. அவைகள் தொடர்பான தகவல்கள், சென்று வருவதற்கான வசதி குறைபாடு காரணமாக மாவட்டத்திற்கு சுற்றுலா சார்ந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தாண்டிக்குடி, பன்றிமலை உள்ளிட்ட இடங்கள் புராண வரலாறை பின்னணியாக கொண்டவை. இங்கு இருக்கும் பழம்பெரும் கோயில்களும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகச்சிறந்த ஆன்மிக அனுபவத்தையும், டிரெக்கிங் அனுபவத்தையும் தரக்கூடிய இடங்களாக இருக்கும். மேலும் கொடைக்கானல் மலையை சுற்றி புகழ்பெற்ற சமவெளிகள், பூங்காக்கள், போட் ஹவுஸ் இடங்களை தவிர்த்து அழகு நிறைந்த நிறைய பள்ளத்தாக்கு பகுதிகள் உள்ளன. இவை வனப்பகுதியின் எல்லைக்குள் இல்லாமல் வருவாய் கிராம எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இருக்காது. இயற்கை அள்ளிக்கொடுத்த கொடையாக விளங்கும் கொடைக்கானல், பழநியை சுற்றிலும் வெளிதெரியாமலிருக்கும் நிறைய சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தினால் மாவட்டத்தின் வருவாய் பெருகுவதோடு உள்மாவட்ட உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.