ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி
நத்தம் : தைப்பொங்கல் நெருங்கி வரும் நிலையில் நத்தம் , சுற்றுப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி நத்தம்,கோவில்பட்டி, சிறுகுடி,உலுப்பகுடி, சேர்வீடு, லிங்கவாடி, கொண்டையம்பட்டி, செந்துறை, சமுத்திராபட்டி, பகுதிகளை சேர்ந்த காளை வளர்ப்போர் தங்களது காளைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக மாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல், நடை ,மண் குத்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.உலுப்பகுடியை சேர்ந்த ராஜா கூறியதாவது:நத்தம் பகுதியில் பல்வேறு கிராம பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது சொந்த பிள்ளைகளை வளர்ப்பது போல் காளைகளையும் வளர்த்து வருகின்றனர். மேலும் காளைகளுக்கு சத்தான உணவு பொருட்களை கொடுத்து திடப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு வளர்க்கப்படும் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து சென்றால் ஆன்லைனில் டோக்கன் பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. நல்ல ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சில நேரங்களில் டோக்கன்கள் கிடைப்பதில்லை. ஆன்லைன் டோக்கன்கள் முறையை ரத்து செய்து விட்டு விழாக் கமிட்டியிடமே டோக்கன் பெறும் முறையை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.