உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பசுமையை பரிசளிக்கும் மரங்கள் இளைய தலைமுறைக்கு ஊட்டம் தரும் தன்னார்வலர்கள்

பசுமையை பரிசளிக்கும் மரங்கள் இளைய தலைமுறைக்கு ஊட்டம் தரும் தன்னார்வலர்கள்

'மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பானதாக மீட்டெடுக்கும் முயற்சியில், அரசு திட்டங்கள், தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தனி நபரையும் தன்னார்வலராக சிறப்படைய செய்வதில் உண்டு,' என, சிலர் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்திய தலையாய பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு, மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை. இதற்கு, மனித செயல்களும் முக்கிய காரணம். மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், பாலிதீன் எரிப்பு, மக்கா கழிவுகள், அதிகரிக்கும் வாகன புகை போன்றவற்றால், காற்று, நீர், வான், நிலத்தை மாசுபடுத்தி வருகிறோம். நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது முன்னோர் நடவு செய்த மரங்களால் அனுபவித்து வரும் இயற்கை சூழலை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது தலையாயக் கடமை என தன்னார்வலர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். ஆத்தூர் வட்டார பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் முனைப்பில் பல்வேறு பணிகளை சில தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த முயற்சி மட்டுமின்றி, சொந்த செலவிலும் இதற்கான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற ரோடுகள், குளக்கரை, கண்மாய், வாய்க்கால்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து 1,500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை பராமரித்து வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய பணி ம.கண்ணன்,அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர், ஆத்தூர்: குழந்தைகள் நம்முடைய சொத்தாக இருந்தாலும், மரத்தையும் நீரையும் அவர்களுடைய சொத்தாக மாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. மரங்களை வளர்த்து நிலத்தடி நீர் சேர்ப்பது இப்போதைய அத்தியாவசிய பணியாகவும் உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு 300க்கும் மேற்பட்ட மூலிகை கன்றுகள் வழங்கினோம். வெறுமனே மரக்கன்று வழங்குவது மட்டுமின்றி, மூலிகை கன்றுகளை பராமரிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 10க்கு மேற்பட்ட கண்மாய்களின் தூர்ந்து போன நீர் வழித்தட வரத்து வாய்க்கால்களை, சொந்த முயற்சியால் சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். 25 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் இருந்த சீமை கருவேல மரங்கள் குளங்கள், பொது இடங்களில் இருந்தும் இயந்திரங்கள் மூலம் வேரோடு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. குடகுனாறு வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களோடு இணைந்து நடை பயண விழிப்புணர்வு ஊர்வலம், இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் போன்றவற்றிலும் முத்திரை பதித்துள்ளோம். சுற்றுச்சூழலை காப்போம் -- ஆ.கருப்பையா, ஆசிரியர், அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளி, நெல்லூர்: சுவாசிக்கும் காற்றை சலவை செய்து சுவாசிக்க முடியாது. இதனை சுத்தப்படுத்தும் ஒரே வழி வடிகட்டியாக மரங்கள் மட்டுமே செயல்படுகின்றன. வரங்களாக இறைவன் அளித்த மரங்களை கொண்டு, உயிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். நாட்கள் என ஏடுகளில் மட்டுமே இருந்த நிலையை மாற்ற, ஓசோன் தின விழா, தண்ணீர் தின விழா, மூங்கில் தின விழா, சுற்றுச்சூழல் தின விழா உள்பட பல்வேறு விழாக்களின் நோக்கத்தை, பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். பரிசுகள் வழங்குவதுடன் மரக்கன்று வளர்க்க ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 2 பூங்காக்கள் ஏற்படுத்தினோம். 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் அடர்ந்த சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சூழலை பாழ்படுத்தும் பாலித்தீன் ஒழிப்பிற்கு மாணவர்களின் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது. சிறிய கன்றுகள் நட்டு வளர்ப்பதில் நடைமுறை பிரச்னைகளை தவிர்க்க, 6 அடிவரை வளர்ந்த கன்றுகளையும் வழங்குகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை