திட்டமிடல் இல்லாத சுரங்கப்பாதை - அரசுப்பணம் 17 கோடி வீணடிப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல்--கரூர் ரோட்டில் ரூ. 17 கோடியில் ரயில்வே சுரங்கப்பாதை கட்டியும் பயனில்லாமல் போனதால் அரசு பணத்தை வீணடித்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.திண்டுக்கல்லிலிருந்து கரூர், திருச்சிக்கு செல்லும் ரோடுகள் நேருஜிநகரில் பிரிந்து செல்கின்றன. அந்த 2 சாலைகளிலும் மிக அருகே ரயில்வே கேட்டுகள் இருந்தன. இதனால் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலமும், கரூர் சாலையில் சுரங்கப்பாதையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. சுரங்கப்பாதைக்காக 2018ல் ரூ.17.45 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டது. 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் பணிகள் முழுமையாக முடியவில்லை. ஆனால் மக்களே பயன்படுத்த தொடங்கி விட்டனர். இத்திட்டம் துவங்கும்போதே பலரும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கிவிடும் மேம்பாலமாக அமைப்பதுதான் சரி என பலரும் கூறி வந்தனர். அதுதான் தற்போது நடந்து வருகிறது. கொளுத்தும் கோடை வெயிலின் போதே இந்த சுரங்கப்பாதையில் நீர் தேங்கும் நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் குளம் போல் மாறிவிட்டது.தரைமட்டத்தில் இருந்து 20 அடி ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாரல் மழை பெய்தாலே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதன் வழியே கனரக வாகனங்கள் செல்ல கூடாது என இரும்பு தடுப்பு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் அதிகமாக உள்ளதால், பஸ்கள், லாரிகள் என அனைத்துமே சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றன. இதனால் சுரங்கப்பாதை பாதைகள் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றி உள்ளன. தண்ணீர் தேங்கியிருப்பதால் பள்ளம் எங்கு இருக்கிறது என்பதே வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைத்தும் பயனற்று போனதால் அரசு பணம் 17.45 கோடி வீணாடிக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.