உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பராமரிப்பற்ற பூங்கா... கொட்டமடிக்கும் கொசு சிரமத்தில் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்

பராமரிப்பற்ற பூங்கா... கொட்டமடிக்கும் கொசு சிரமத்தில் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்

திண்டுக்கல் : பராமரிக்கப்படாத பூங்கா, நாய்கள் தொல்லை, கொசு உற்பத்தி ஜோர், துார்வாரப்படாத சாக்கடை என பல்வேறு பிரச்னைகளோடு அவதிப்படுகின்றனர் கூட்டுறவு நகர் குடியிருப்போர் வாசிகள். திண்டுக்கல் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் திராவிடராணி, துணைத்தலைவர் ஏகம்மை, கவுரவத்தலைவர் ராமா, செயலாளர் அமரசுந்தரி, பொருளாளர் சசிகலா, உறுப்பினர்கள் ராகிணி, மரகதம், மாலதி கூறியதாவது : கூட்டுறவு நகரில் எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகள் எதுவுமே துார்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. கூட்டுறவு நகர், முத்துநகர், காந்திஜிநகர் என அனைத்து பகுதி மக்களுக்கும் சேர்த்து கோயிலை ஒட்டிய பூங்கா உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமாகி துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. மழை நேரம் மட்டுமில்லாமல் வெயில் நேரங்களிலும் பூங்காவில் தண்ணீர் தேங்குகிறது. நடை பயிற்சிக்கான தளங்களை காணவில்லை. எங்கு பார்த்தாலும் புற்கள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்கிறது. மணல் பரப்பி மீண்டும் புற்கள் வளராதபடி மாற்றியமைத்துக் கொடுக்க வேண்டும். பூங்காவை ஒருமுறை சீரமைத்து தந்தால் போதும் . அதன்பின் சங்கத்தினரே பராமரித்து கொள்கிறோம். பெண்கள், முதியவர்கள் அதிமுள்ள பகுதி என்பதால் நடைபயிற்சி என்பது அத்தியவசிய தேவையாக இருக்கிறது. இங்குள்ள புதர்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் உள்ளதால் அச்சத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. பூங்காவில் உள்ள மேல்நிலைத்தொட்டிக்கு வரும் ஆப்பரேட்டர்கள் அவதிப்படுகின்றனர். மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு கழிவுநீர் தேங்குகிறது. பகல் மட்டுமல்லாது இரவிலும் கொசுக்கள் மக்களை கடித்து துன்புறுத்துகிறது. டெங்கு பரவும் அபாயமும் இருப்பதால் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். கொசு மருந்து அடிப்பதே இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி