சீரமைக்கப்படாத ரோடுகள்; கழிவுநீர் தேக்கத்தால் அவதி பிரச்னைகளின் பிடியில் பள்ளப்பட்டி ஊராட்சி மக்கள்
திண்டுக்கல்: சீரமைக்கபடாத ரோடுகள், ரோட்டில் கொட்டப்படும் குப்பை, முறையான பராமரிப்பு இல்லாத சாக்கடைகளால் ரோட்டில் செல்லும் கழிவுநீர் என பள்ளப்பட்டி ஊராட்சி மக்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.ஏ.பி., நகர், எம்.ஜி.ஆர்., நகர், பெரியாண்டவர் நகர், அந்தோணியார் தெரு, குடைப்பாறைப்பட்டி பின்புறம், சின்ன , பெரிய பள்ளபட்டி, கொட்டபட்டி, புதுப்பட்டி, முருகபவனம், வடக்கு பாறைப்பட்டி, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பிரச்னைகள் ஏராளம் உள்ளன. கொட்டப்பட்டி பகுதிகளில் காவிரி குடிநீர் என்பது சரியாக வருவதில்லை. பிஸ்மி நகர் பகுதியில் சாக்கடை இல்லாததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.பெரியாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்று வரை மண்ரோடுதான் உள்ளது. எம்.ஜி.ஆர்., நகர் தொடக்கம் முதல் பிஸ்மி நகர் வரை தார் ரோடு போடப்படாமல் சிதிலமடைந்து வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் பதம் பார்க்கும் நிலை உள்ளது. சின்னபள்ளபட்டியிலும் அதே நிலைதான் உள்ளது.மழை பெய்யவில்லை என்றாலும் முறையற்ற ரோடினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழை நேரங்களில் தெருக்களில் நடமாட முடியாத அளவிற்கு மழைநீர் தேங்குகிறது. குப்பைத்தொட்டிகள் இல்லாத மாவட்டம் என்ற திட்டத்தில் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதால் கண்ட இடத்தில் குப்பை கொட்டப்படும் அவல நிலை நீடிக்கிறது. கழிவுநீர் ஓடை தான் பிரச்னை
மணி, பழைய கன்னிவாடி ரோடு: கொட்டபட்டி செல்லும் பழைய கன்னிவாடி ரோடு பகுதியில் மாதா மெடிக்கல் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மழைகாலம் என்றால் சொல்லவே வேண்டாம். கழிவுநீர் தேங்கி நோய் தொற்று சூழல் உருவாகி விடுகிறது. தேவை அடிப்படை வசதிகள்
சுரேஷ், ஏ.டி., காலனி, சின்ன பள்ளபட்டி: கழிவு நீர் ஓடைகளும், ரோடுகளும் தான் எங்கள் ஊராட்சிக்கு பிரதான பிரச்னையாக உள்ளது. இதனை சரிசெய்தாலே பாதி பிரச்னைகள் முடிந்துவிடும். ஒவ்வொரு நாளும் மக்கள் சிரமப்படுகின்றனர். கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. தண்ணீர் பிரச்னையும் உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமன்பதே ஊராட்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தார் ரோடுகள் வேண்டும்
லோகநாதன், வார்டு உறுப்பினர், பள்ளபட்டி ஊராட்சி: தெருக்கள் , குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை விரைந்து சரிசெய்ய வேண்டும். பல ஆண்டுகளாக இங்குள்ள ரோடுகள் சேதமாகி கிடப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.தொடரும் இப்பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடைகள் இல்லாமல், கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. திட்டம திப்பீடு தயார்
பரமன், ஊராட்சி தலைவர், பள்ளபட்டி: காவிரி குடிநீர் குழாய் சமீபத்தில் உடைந்ததால் தண்ணீர் பிரச்னை இருந்தது. தற்போது அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது. ஊராட்சி பகுதிகளில் உள்ள ரோடுகளை சரிசெய்ய திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.