வேனை மீட்கும் பணியில் தொய்வு
பழநி: பழநி – கொடைக்கானல் ரோட்டில் சவுரிக்காடு அருகே 300 அடி பள்ளத்தில் விழுந்த வேனை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நவ.,20 இரவு இந்த ரோட்டில் மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து பழநி நோக்கி வந்த சுற்றுலா வேன் சவுரிக்காடு அருகே 300 அடி பள்ளத்தில் விழுந்தது. இவ்விபத்தில் 3 பேர் பலியாகினர்; 16 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இன்று (நவ.,21) அதிகாலை முதல் பள்ளத்தில் சிக்கிய வேனை மீட்கும் பணி நடந்தது. அதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பழநி – கொடைக்கானல் ரோட்டில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமம் அடைந்தனர். கிரேன்களை பயன்படுத்தி வேனை மீட்க பல மணி நேரம் முயன்றும் முடியாத நிலையில், வேனை பாகங்களை வெட்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அவ்வழியாக வழக்கம்போல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.