பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு பகுதியில் பரவி உள்ள கற்களால் வாகனங்கள் தடுமாற்றத்துடன் கவிழும் அவல நிலை தொடர்கிறது.சின்னாளபட்டி காமராஜர் சாலையில் அரசு, தனியார், கூட்டுறவு என 6 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இத தவிர அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், அண்ணா தினசரி மார்க்கெட் போன்ற இடங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இப்பகுதி அமைந்துள்ளது. இந்த ரோட்டில் சில மாதங்களுக்கு முன் ஓடைத்தெரு நுழைவாயில் அருகே பாலம் சேதம் அடைந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடந்தது. முந்தைய பாலத்தின் உயரத்தை விட கூடுதலாக 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.இப்பணியின்போது பாலத்தின் இருபுறமும் சில அடி துாரம் வரை இணைப்பு பகுதியாக மண் குவித்தனர். முழுமையாக பணி முடிக்காமல் போக்குவரத்திற்கான வழித்தடமாக திறந்து விடப்பட்டு உள்ளது. அடுத்த சில மணி நேரத்திலே இங்குள்ள ஜல்லி, கற்கள் பெயர்ந்து வர துவங்கின. குண்டும் குழியுமான ரோடு, வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகளையும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. இப்பகுதியை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் தினமும் தடுமாறி விழும் அவல நிலை தொடர்கிறது. முதியோர் பெண்கள் மட்டுமின்றி பலரும் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியைச் சேர்ந்த குமார் கூறுகையில்,''பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இப்பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பொது நிதியில் பணியை மேற்கொண்ட போதும் அதனை முழுமை படுத்தாமல் கிடப்பில் விட்டுள்ளனர். அதிகாரிகள் அலட்சியத்தால் தினமும் பலர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர் '' என்றார்.