மீளாய்வு கூட்டத்தில் வரம்பு மீறிய பேசிய சி.இ.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்
மீளாய்வு கூட்டத்தில் வரம்பு மீறிய பேசிய சி.இ.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்ஈரோடு,: ஈரோட்டில் நேற்று முன்தினம் வணிகவியல் முதுகலை ஆசிரியர் மீளாய்வு கூட்டம் நடந்தது. இதில், 'ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு சம்பளம் வாங்குகிறீர்கள். இதற்கு சனிக்கிழமைகளில் ஈடு செய்கிறீர்களா? தேர்வில் 90க்கு 35 மதிப்பெண் மாணவன் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருத முடியும். அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுடன் 35 எடுத்தால் தேர்ச்சியாக கருத முடியாது. சராசரி மதிப்பெண், 50க்கும் குறைவாக எடுத்தால் ஆசிரியர்கள் வேலை செய்யவில்லை என கருதுவேன். சராசரி மதிப்பெண், 45க்கு குறைவாக வழங்கிய ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். விளக்கம் சரியில்லை எனில் 17-பி சார்ஜ் வழங்கப்படும். பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி, சராசரி மதிப்பெண், 50க்கு குறைவாக வழங்கும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவர். மெல்ல கற்கும் மாணவர்கள் என யாரும் இல்லை. ஆசிரியர்கள் தான் அவ்வாறு மாணவர்களை உருவாக்குகின்றனர். இதற்கு ஆசிரியர்களே பொறுப்பு' என்று, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் பேசியுள்ளார். இதை கண்டித்து ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை (சி.இ.ஓ.,), 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று மாலை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் இதில் பங்கேற்றனர். ஆசிரியர் கழக பிரதிநிதிகள், சி.இ.ஓ.,வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.'மனம் புண்படும்படி பேசியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். வரும் நாட்களில் இதுபோன்று நடக்காது' என சி.இ.ஓ., கூறியதாக அவரின் நேர்முக உதவியாளர் தெரிவிக்கவே, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.