போதை நபர்கள் மீது நடவடிக்கை வரப்பாளையம் போலீசில் புகார்
போதை நபர்கள் மீது நடவடிக்கை வரப்பாளையம் போலீசில் புகார்நம்பியூர்:நம்பியூரை அடுத்த வேமாண்டம்பாளையம், கரட்டுப்பாளையம் அருகில் கரடி கோவில் உள்ளது. இங்கு கிடா வெட்டு நிகழ்வு நேற்று நடந்துள்ளது. இதில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் ஐந்து கார்களில் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது ஒரு கார் எதிரே வந்த டூவீலர் மீது மோதியுள்ளது. அந்த காரின் டிரைவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. டூவீலரில் வந்த இருவர் தடுமாறி விழுந்துள்ளனர். இதனால் காரில் வந்தவர்களை கண்டித்து, வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களோ டூவீலரில் வந்த இருவரையும் மிரட்டி, 5,௦௦௦ ரூபாய் பெற்றுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காரில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போதையில் இருந்த டிரைவர், காரை பின்னோக்கி வேகமாக இயக்கியபோது, பின்னால் நின்ற பெண் மீது மோதும்படி சென்றுள்ளார். இதனால் வாக்குவாதம் மேலும் அதிகரிக்க, போதை டிரைவர் மொபைல்போனில் மற்ற கார்களில் வந்தவர்களை அழைத்துள்ளார். காரில் வந்த, 30க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த, 10க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் ஒன்று சேரவே, கார்களை எடுத்துக்கொண்டு பறந்தனர்.காரில் வந்த கும்பல் மீது நடவடிக்கை கோரி, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நம்பியூர்- புளியம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வரப்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.