| ADDED : ஜூலை 13, 2011 03:22 AM
ஈரோடு: ஈரோடு மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் கீழ் தகுதியான அனைவரும் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈரோடு மாநகரப் பகுதியில் மத்திய, மாநில அரசின் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், நகர்ப்புற சுய வேலைவாய்ப்புத் திட்டம், நகர்ப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் மூலம் இத்திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு செய்து, நிதியுதவி பெற்றுத் தரப்படுகிறது.மாநகராட்சி பகுதிக்கு பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 2010-11ம் ஆண்டுக்கு 35.98 லட்சம் ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 103 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 6.36 லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 65 பயனாளிகளுக்கு 16 வங்கிகள் மூலம் மானிய கடன் வழங்கப்பட்டது.நகர்ப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 குழுக்களிடமிருநது கூட்டுத் தொழில் செய்ய விண்ணப்பம் பெறப்பட்டு, 4.78 லட்சம் ரூபாய் மானியத்துடன் விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பி கடன் வழங்கப்பட்டது. எட்டு குழுக்களை சேர்ந்த 80 உறுப்பினர்களுக்கு 1.59 லட்சம் சுழற்சி நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது.தொழிற்பயிற்சியளித்தல் திட்டத்தின் கீழ் மொத்தம் 9.54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்று, 113 பயனாளிகளுக்கு கணினி, அழகுகலை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.கடந்த நிதியாண்டில் அரசிடமிருந்து பெற்ற நிதியை முழுமையாக பயன்படுத்தி பயனாளிகளுக்கு நிதியுதவி, பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டது. எனினும், பலருக்கு திட்டத்தின் பலன் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.எனவே, நடப்பாண்டில் மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களில் தகுதியான அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் நிதியை அதிகளவில் பெற முயற்சி எடுக்க வேண்டும்.