பர்கூர் மலையில் 3 கி.மீ., நடந்து சென்றுமக்களிடம் குறை கேட்டறிந்த கலெக்டர்
பர்கூர் மலையில் 3 கி.மீ., நடந்து சென்றுமக்களிடம் குறை கேட்டறிந்த கலெக்டர்ஈரோடு:அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதி கத்திரிமலையில் நேற்று முன்தினம் மனுநீதி நாள் முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அங்கு நடந்த மருத்துவ முகாமில், அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உட்பட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. அங்குள்ள அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலை பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பழங்குடியினர் பகுதியில் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த இடத்துக்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், 3 கி.மீ., நடந்தும், 5 கி.மீ., டிராக்டரில் பயணித்தும் சென்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில், 3,500 அடி உயரத்தில் கத்திரிமலை மலை அமைந்துள்ளது. இங்கு மலை உச்சியில் மலையம்பட்டி, மாதம்பட்டி என இரு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த, 76 குடும்பத்தினர் பல தலைமுறையாக வாழ்கின்றனர். மலைக்கு முறையான சாலை வசதி இல்லை. மழை இல்லாத காலங்களில் சிறிது துாரம் மட்டும் கரடுமுரடான மண் சாலையில் பிக்கப் வேன், ஜீப், சிறிய வகை டிராக்டரில் சென்று, பின் மலைப்பாதையில் கிராமத்துக்கு நடந்தே செல்ல வேண்டும்.அந்தியூரில் இருந்து சேலம் மாவட்டம் கொளத்துார் அருகே கத்திரிபட்டி சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக மீண்டும் கத்திரிமலைக்கு வர வேண்டும். கத்திரிமலைக்கு கீழே, 8 கி.மீ.,க்கு முன்னதாக ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு, குறுகிய மண் மலைப்பாதையில் சிறிய வகை டிராக்டரில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் பயணித்தனர். 5 கி.மீ., டிராக்டர் பயணத்துக்கு பின், உயரமான மலைக்கு, மண் - பெரிய பாறை, கற்கள் உள்ள வழித்தடத்தில் 3 கி.மீ.,க்கு அனைவரும் நடந்தே, கிராமத்தை அடைந்தனர்.வழக்கமாக இங்கு திட்டப்பணி, பெரிய அளவிலான ஆய்வுக்கு மட்டும் துறை அதிகாரிகள், வனத்துறையினர் செல்வதுண்டு. தற்போது கலெக்டர் உள்ளிட்ட குழுவினர் மொத்தமாக சென்று, மருத்துவ முகாமுடன், மனுநீதி நாள் முகாமும் நடத்தி, மக்களின் நீண்ட கால கோரிக்கை, குறை கேட்டறிந்துள்ளனர். இவ்வாறு கூறினர்.கலெக்டருடன் அவரது நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், துணை இயக்குனர் (குடும்ப நலன்) கவிதா, அந்தியூர் தாசில்தார் கவியரசு உட்பட பலர் சென்றனர்.