௧,௫௭௭ சதுர மீ., பரப்பில் 2 தளங்களுடன் தீயணைப்பு நிலையத்துக்கு புது கட்டடம்
ஈரோடு, டிச. 24-ஈரோடு தீயணைப்பு நிலையம், 1954 முதல் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது ஈரோடு தீயணைப்பு நிலையம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. பழமையான கட்டடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 20ல் ஈரோட்டில் நடந்த அரசு நிகழ்ச்சியில், 8.03 கோடி ரூபாய் மதிப்பில், தீயணைப்பு துறைக்கு கட்டடம் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் தீயணைப்பு துறை வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் கூறியதாவது:கீழ் தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் தீயணைப்பு அலுவலகம் 1,577 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட உள்ளது. கீழ் தளத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள், அலுவலக ஜீப், கன்ட்ரோல் ரூம் உள்ளிட்டவை இருக்கும்.முதல் தளத்தில் தீயணைப்பு நிலையம், வீரர்கள் ஓய்வறை, ஸ்டாக் வைக்கும் அறை கட்டப்படும். இரண்டாவது தளத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அறை, மீட்டிங் ஹால் உள்ளிட்டவை கட்டப்படும். தீயணைப்பு நிலையம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகமாக அமையும். அரசு பணி ஆணை மற்றும் நிதி ஒதுக்கீடு அளித்த பின் பணிகள் தொடங்கும். கட்டுமான பணியின் போது தற்போதுள்ள தீயணைப்பு துறை வளாகத்திலேயே தீயணைப்பு நிலையம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம் தற்காலிகமாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.