| ADDED : ஜூன் 15, 2024 07:27 AM
புன்செய்புளியம்பட்டி : பவானிசாகர் யூனியனில், 15 பஞ்சாயத்துகளில், நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு நுாறு நாட்கள் வேலை கொடுத்து, ஊதியம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை காரணம் காட்டி கடந்த மூன்று மாதங்களாக, வேலை வழங்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வேலை வழங்கக்கோரி பவானிசாகர் ஒன்றியம் நல்லுார் ஊராட்சி அலுவலகத்துக்கு, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனுக்களுடன் நேற்று திரண்டனர். பஞ்., தலைவர் மூர்த்தியிடம் தனித்தனியாக மனுக்களை வழங்கி கூறியதாவது:கடந்த மூன்று மாதங்களாக நுாறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். பவானிசாகர் யூனியன் அலுவலகத்துக்கு சென்று கேட்டால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுவந்தவுடன் வேலை வழங்கப்படும் என்றனர். தேர்தல் முடிந்தும் வேலை வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறினர்.பஞ்., தலைவர் மூர்த்தி கூறுகையில், ''நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு, 310 மனுக்களை வழங்கியுள்ளனர். முன்னுரிமை அடிப்படையில், இத்திட்டத்தில் பணிபுரிந்த மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.