1,005 குளங்களுக்கு தண்ணீர் செல்வது உறுதி அத்திக்கடவு திட்ட ஆய்வில் அமைச்சர் தகவல்
ஈரோடு, டிச. 27-ஈரோட்டில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. ஆய்வுக்கு பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கடந்த ஆக., 17ல் முதல்வர் துவக்கி வைத்தார். அதிகபட்ச நீரேற்றும் திறன் வினாடிக்கு, 250 கனஅடியாக உள்ளது. இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளுக்கு ஓராண்டு காலத்தில், 1,500 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள, 1,045 குளம், குட்டைகளில் தற்போது, 1,005 குளம், குட்டைகளுக்கு நீர் செல்வது உறுதி செய்யப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 40 குளம், குட்டைகளுக்கு விரைவில் நீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தண்ணீர் குறைவாக செல்லும் குட்டை, குளங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கிராம அளவில் குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், பிற திட்டங்களில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு திட்ட பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையர் மணிஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், அத்திக்கடவு - அவிநாசி திட்ட கண்காணிப்பு பொறியாளர் திருமலைக்குமார், செயற்பொறியாளர் அருளழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.