தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் 17 பவுன், ரூ.1.20 லட்சம் திருட்டு
காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள நத்தக்காடையூர், வேலன்நகரை சேர்ந்தவர் தங்கராசு, 45; காங்கேயத்தில் உள்ள தனியார் குளிர்பான நிறுவன மேலாளர். இவர் மனைவி கோகிலா, 40; மனைவியுடன் நேற்று காலை, 9:30 மணி அளவில் ஈரோடு அருகே பூந்துறையில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். நண்பகல், 11:30 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, தங்கச்சங்கிலி, மோதிரம், வளையல், தோடு என, 17.5 பவுன் நகை, 1.20 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. காங்கேயம் போலீசார், கைரேகை நிபுணர், மோப்பநாய் சோதனை நடந்தது. ஆள் நடமாட்டம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், பட்டப்பகலில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.