கடந்த 5 ஆண்டுகளில் 2.15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை மூலம் கடந்த, 5 ஆண்டுகளில், 2.15 டன் புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், கூல் லிப், குட்கா விற்பனை செய்யும் கடைகள் மீது தொடர் ஆய்வு, உணவு பாதுகாப்பு துறை, போலீஸ், உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது.ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த, 2020 முதல், 2025 வரை, 2.15 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டு கடந்த, 8ல் ஈரோடு வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டது. முதன்முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2ம் முறைக்கு, 50 ஆயிரம் ரூபாயுடன் அக்கடை அல்லது நிறுவனம் தற்காலிகமாக மூடப்படும். தொடர்ந்து, 3ம் முறையும் கண்டறியப்பட்டால், 1 லட்சம் ரூபாய் அபராதமும், கடையின் வணிகம் நிரந்தரமாக தடை செய்யப்படும். அவர்களது உணவு பாதுகாப்பு சட்ட உரிமம் அல்லது பதிவு சான்று நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, கடும் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும். இவ்வாறு கூறினர்.