தாய், மகளிடம் 3.5 பவுன் பறிப்பு
மோகனுார், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் மனைவி கோமதி, 49; இவரது மகள் பவித்ரா, 26. இவர், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தாய் மகள் இருவரும், நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பஸ்சில் சென்று விட்டு அங்கிருந்து முசிறியில் உள்ள தன் உறவினர் வீட்டில் இருந்து ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு, நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது, வளையப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பஸ் ஸ்டாப்பில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு காரில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், இவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, கோமதி, பவித்ரா இருவர் கழுத்தில் அணிந்திருந்த, 3.5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் காரில் ஏறிச்சென்று தலைமறைவாகினர்.கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த இருவரும் சத்தம் போட்டனர். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் தாய், மகளிடம் நகை பறிந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.