பூஜை பொருள் திருட்டில் குற்றவாளி கைது
ஈரோடு :ஊஞ்சலுார் அருகே கொளாநல்லி கிராமத்தில் கருவேலம்பாளையத்தில் மாசி பெரியண்ணசாமி கோவில் உள்ளது. கடந்த, 24ம் தேதி இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, குத்து விளக்கு, பித்தளை தீர்த்த குடம், பித்தளை சொம்பு, இரண்டு மணி, தட்டு, துாப கால் உள்ளிட்ட சுவாமி பூஜை பொருட்களை திருடி சென்றார். பூசாரி அன்பரசன் புகாரின்படி மலையம்பாளையம் போலீசார், களவாணியை தேடி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த வெள்ளைசாமி, 31, என்பவரை கைது செய்து, பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.வெள்ளைசாமி மீது ஈரோடு தாலுகா, தாராபுரம், பரமத்தி போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளது. கருவேலம்பாளையத்துக்கு மஞ்சள் வெட்டும் பணிக்கு வந்தவர், கோவிலை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தில் வெள்ளைசாமியை ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.