மழை, வெள்ள பாதிப்புகள் சீரமைப்பு எச்சரிக்கையுடன் செயல்பட யோசனை
ஈரோடு, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையுடன் இருக்க ஈரோடு கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை கடந்த, 16ல் துவங்கி இம்மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்கிறது. கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி தாலுகாக்களில், 6 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. 6 வீடுகளுக்கும் தலா, 6,500 ரூபாய் வீதம் பகுதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.அந்தியூர் தாலுகா பர்கூர் 'ஆ' கிராம வனப்பகுதியில் பெய்த மழையால், நெய்கரை பகுதி தார் சாலை, 2 இடங்களில் மண் சரிவு, சிறிய பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. உருண்டு விழுந்த மண், பாறைகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றி போக்குவரத்து சீரானது. தாளவாடி தாலுகா ஆசனுாரில் பெய்த மழையால், திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகள், 7, 8, 20, 27ல் மண் சரிவு ஏற்பட்டு, சரி செய்து போக்குவரத்து சீரானது.சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்துார் கிராமம், கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் மல்லியம்மன் கோவில் அருகே மண் சரிவு ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் சாலை, தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவை உடனடியாக சீரமைத்து போக்குவரத்து சீர் செய்தும், நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.