உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

ஈரோடு:சொத்து வரி குறைக்காதது, சாலையோர கடைகளில் சட்ட விரோத பண வசூல் செய்வது ஆகியவற்றை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நேற்று ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.ஈரோடு மாநகராட்சி கூட்டம், நேற்று மேயர் நாகரத்தினம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், துணை கமிஷனர் தனலட்சுமி முன்னிலையில் நடந்தது.இதில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசுகையில்,' சொத்து வரியை குறைக்க வேண்டும் என, ஒன்றரை மாதத்துக்கு முன் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை சொத்து வரி குறித்து எவ்வித பதிலும் இல்லை.மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் கடை போட்டால், சிலர் பணம் வசூலிக்கின்றனர். ஆனால் மாநகராட்சிக்கு இந்த வருவாய் கிடைப்பதில்லை. சட்ட விரோதமாக சாலையோர கடைகளில், பணம் வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியபடி, அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் தி.மு.க., கவுன்சிலர்கள் பேசுகையில்,' இம்முறை மாநகராட்சி அலுவலர்களுடன் கவுன்சிலர்கள் வரி வசூலிக்க வந்தனர். ஆனால் அடுத்த முறை வர மாட்டார்கள். காரணம், வரியை குறைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் நடவடிக்கை இல்லை. வரி வசூலின் போது சில அலுவலர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர். வரி விதிப்பில் வித்தியாசம் இருப்பதாக கூறி, ஏற்கனவே வரி செலுத்தியவர்களிடம் மீண்டும் வரி வசூலுக்கு செல்கின்றனர். கனி மார்க்கெட் வணிக வளாக கடைகளுக்கு வாடகையை குறைத்தது போல், நேதாஜி சாலை வணிக வளாக கடைகளுக்கும் குறைக்க வேண்டும். கனி மார்க்கெட் முன் விதிமுறை மீறிய, 10 கடைகளை அகற்ற வேண்டும். அவற்றை அகற்றாமல் இருக்க யார் அழுத்தம் கொடுக்கின்றனர். கடைகளை அகற்றவில்லை என்றால், அடுத்த கூட்டத்தின் போது போராட்டம் செய்வேன் என, தி.மு.க., கவுன்சிலர் செந்தில் குமார் தெரிவித்தார்.கூட்டத்தின் இடையே, மண்டல தலைவர் பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியான, 26 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை