உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து வாக்குவாதம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து வாக்குவாதம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

ஈரோடு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு, மாநகராட்சி நிதியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஈரோடு மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பின்னர் துவங்கிய கூட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து விவாதம் நடந்தது.அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெகதீசன் பேசுகையில்,'' மாநகராட்சியில் திட்டப்பணிகளை செய்ய நிதி நிலைமை சரியில்லை என்கிறீர்கள். ஆனால், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யறீங்க. இது எந்த விதத்தில் நியாயம். முகாம் செலவை வருவாய்துறை தான் செய்ய வேண்டும். மாநகராட்சி பொதுநிதியை செலவு செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை கூறி வாக்குவாதம் செய்தனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம், மாநகராட்சி பகுதியில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். மக்கள் பயன்பெறும் வகையில், உருவாக்கப்பட்ட இத்திட்டம் இந்திய அளவில் சிறந்ததாக உள்ளது. அம்மா உணவகத்திற்கு கூட, மாநகராட்சி நிதி கொடுக்கப்படுகிறது. நீங்கள் கூறுவது போல், அதற்கான நிதியை நிறுத்திவிட்டு, அம்மா உணவகத்தை மூடி விடலாமா என கேள்விகளை எழுப்பி, தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.இதையடுத்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசுகையில்,'' புதிதாக விதிக்கப்பட்ட மாநகராட்சி வரிகளை குறைக்க வலியுறுத்தி, 60 வார்டு கவுன்சிலர்களும் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பியும், இன்று வரை முடிவு எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறோம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு, மாநகராட்சி பொது நிதியிலிருந்து செலவு செய்வதை கண்டிக்கிறோம். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில், சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று வரை குடிநீர் வழங்கப்படாமல் இருப்பதை கண்டிக்கிறோம். எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்,'' என்றார்.இதையடுத்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி