தொழிலதிபரிடம் ரூ.1.81 கோடி மோசடி: மூன்று பேர் மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ.1.81 கோடிமோசடி: மூன்று பேர் மீது வழக்கு ஈரோடு, நவ. 28-அந்தியூர், எண்ணமங்கலம் செட்டுக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜவகரிடம் அளித்த புகார் மனு: பெருந்துறை சிப்காட்டை தலைமையிடமாக கொண்டு, தென்னை நார் உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை, பெருந்துறை சீரங்ககவுண்டன் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி, அவரது மனைவி சாந்தாமணி, பெருந்துறை வி.சி.வி. நகரை சேர்ந்த பாஸ்கர் கூட்டாக இணைந்து நடத்தி வந்தனர். இந்நிறுவனத்திற்காக அவர்கள் மூவரும், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். கடனை சரிவர கட்டாததால், அந்த நிறுவனத்தை ஏலத்தில் விட வங்கி முடிவு செய்தது. பொன்னுசாமி, சாந்தாமணி மற்றும் பாஸ்கர் ஆகியோர் இடைத்தரகர் ஒருவர் மூலம் என்னை அணுகினர். அவர்கள் என்னிடம், 'வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் நிறுவனம் ஏலத்துக்கு வந்துவிட்டது. நீங்கள் வங்கியில் கடன் தொகையை செலுத்தி விட்டால், நாங்கள் எங்களுடைய நிறுவனத்தை உங்களுக்கு எழுதி கொடுத்து விடுகிறோம்' என்று கூறினர். இதனை உண்மை என நம்பி, தவணை முறையில் வங்கி மூலமாக அவர்களுக்கு, 1 கோடியே 81 லட்சத்தை வழங்கினேன். அவர்கள் நிறுவனத்தை எனது பெயருக்கு எழுதி கொடுக்காமலும், நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர். மேலும், என்னை போலவே மூவருக்கு அதே நிறுவனத்தை விற்று பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, விஜயகுமாரிடம் பணம் பெற்று மோசடி செய்த பொன்னுசாமி, அவரது மனைவி சாந்தாமணி மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.