படையெடுத்த பக்தர்களால் சென்னிமலையில் நெரிசல்
சென்னிமலை, செவ்வாய் பரிகார தலமாக விளங்கும் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, செவ்வாய்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.இந்நிலையில் செவ்வாய் தினமான நேற்று, அமாவாசை மற்றும் கடந்த, 18 மாதங்களாக கார், பைக் மலை கோவிலுக்கு அனுமதியில்லாதது போன்று காரணங்களால் பக்தர்கள் குவிந்தனர். இதுபோன்ற கூட்டம் சென்னிமலை தைப்பூச விழாவுக்குத்தான் வரும்.இதனால் மலை கோவில் பாதையில் போக்குவரத்து பாதித்தது. சென்னிமலை நகர பகுதிகளிலும் நெரிசல் ஏற்பட்டு, ௩ கி.மீ., துாரத்துக்கு கார்கள் அணிவகுத்து நின்றன. சென்னிமலை போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினாலும் காரில் வந்தவர்கள் நகரை கடந்து செல்ல ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. அதேசமயம் மலை கோவிலில், சிறப்பு தரிசனத்தில் ஒரு மணி நேரமும், பொது தரிசனத்தில் மூன்று மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.