உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் கரூரில் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் கரூரில் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

கரூர், ''பொருளாதார வளர்ச்சியில் தமிழகம், 9.69 சதவீதத்துடன் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.கரூர் திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் 162.25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:தமிழக அரசு பட்டா பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக, நடைமுறைகளை எளிமையாக்க உத்தரவிட்டது. இதனால்தான் தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில், 18.30 லட்சம் பட்டாக்கள் கொடுக்க முடிந்தது. அடுத்ததாக பட்டா பெற்றவர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்தில் கீழ், ஏராளமான பெண்கள் இலவச பஸ் பயணம், மேற்கொண்டு வருகின்றனர்.கல்லுாரி மாணவ, மாணவியர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், 8 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். காலை உணவு திட்டம் மூலம், 18 லட்சம் குழந்தைகள் பயனடைத்துள்ளனர். ஒரு கோடியே, 15 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களால் இன்றைக்கு, 9.69 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மாற்றுத்திறனாளிகளை, உள்ளாட்சி பிரதிநிதிகளாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், விளையாட்டு துறை சார்பில் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, 7 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம், மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த திட்டங்களை எல்லாம், அடுத்த தேர்தலை மனதில் வைத்து செயல்படுத்தவில்லை. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து திட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் கலெக்டர் தங்கவேல், கரூர் எம்.பி.,ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகரட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை