| ADDED : ஆக 29, 2011 12:58 AM
ஈரோடு: விரைவு பட்டா மாறுதல் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பொதுமக்கள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை இருந்தது. அதை எளிதாக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவு பட்டா மாறுதல் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பட்டா மாறுதல் பெற வி.ஏ.ஓ.,விடமே, மக்கள் மனு அளிக்கலாம். விசாரித்து 15 நாளில் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2,500 பேர் பட்டா பெற்றுள்ளனர். விரைவு பட்டா மாறுதல் திட்டம் உள்பட அரசின் பல்வேறு திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை செய்துள்ளது. முதல்வரின் இச்சிறப்பு திட்டத்தால் பயனடைந்த கொல்லங்கோவில் புவனேஸ்வரி கூறுகையில், ''எனக்கு பரம்பரை சொத்து உள்ளது. அதை பிரித்து பட்டா மாறுதல் செய்ய பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. அந்த மனு மீது விசாரித்து, பரிந்துரை செய்யவே பல மாதங்கள் ஆகின. முதல்வர் கொண்டு வந்த சிறப்பு திட்டத்தால், மனு அளித்த 15 நாளில் எனக்கு பட்டா கிடைத்து விட்டது. முதல்வருக்கு எனது நன்றி,'' என்றார். சூரியம்பாளையம், எலவங்காட்டை சேர்ந்த தனக்கொடி மனைவி ஜெயலட்சுமி கூறுகையில், ''எனது கணவர் இறந்து விட்டார். குடும்ப சொத்தாக உள்ள விவசாய நிலத்துக்கு பட்டா பெயர் மாற்ற பல ஆண்டுகள் முயற்சித்தும் கிடைக்கவில்லை. முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்த 15 நாளில் எனக்கு பட்டா கிடைத்து விட்டது. முதல்வருக்கு எனது நன்றி,'' என்றார்.