உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் மக்கள் ஏரி மீன்பிடிக்க தடை சங்கத்துக்கு உரிமம் வழங்க முயற்சி

உள்ளூர் மக்கள் ஏரி மீன்பிடிக்க தடை சங்கத்துக்கு உரிமம் வழங்க முயற்சி

ஈரோடு: ஏரியில் மீன்பிடிக்க உரிமம் வழங்கக்கோரி, கீழ்வாணி மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், கலெக்டர் காமராஜிடம் மனுக்கொடுத்தனர். மனுவில் கூறியுள்ளதாவது:கோபி, கீழ்வாணி பகுதியில், மூங்கில்பட்டி அருகே ஓலைப்பாடி, வேம்பத்தி, முனியப்பம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 250 பேர், கீழ்வாணி மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ளனர். இச்சங்க எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குளம், மீன்வளர்ப்பு குட்டைகள் இல்லை. பவானிசாகர் ஆற்றுப்பகுதியில் மிகக்குறுகிய பகுதியில் மட்டும் இவர்கள் மீன்பிடிக்கின்றனர். அங்கு சிலர் நாட்டுத்தோட்டாக்களை வீசி, மீன் இனத்தை பிடித்தும் வருவதுடன், இச்சங்கத்தினரை மீன்பிடிக்க தடை செய்கின்றனர். துறை மூலம் முயன்றும் நடவடிக்கை இல்லை. அதே பகுதியில் உள்ள அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கீழ், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, சத்தியாபாளையம் ஏரி, தண்ணீர்பாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி ஆகியவை உள்ளன.இச்சங்கத்தில் உள்ள 150 உறுப்பினர்கள், இப்பகுதியை ஏலம் எடுத்து மீன்பிடிக்கின்றனர். வரட்டுப்பாளையம் அணையில் மீன்பிடிக்கும் 32 பேரும் அந்தியூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் குளத்தை ஏலமெடுத்து, வேறு நபர்களுக்கு அதிக விலைக்கு உள் ஏலம் விடுகின்றனர். இக்குளங்கள் அனைத்தும் வேம்பத்தி ஏரியில் இருந்து மூன்று கி.மீ., தொலைவுக்குள் உள்ளன. சங்கங்கள் சாராத, தனி நபர்களுக்கு உள் ஏலம் விடுவதை தவிர்த்து, எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்தியூர் பெஸ்தவர் மீனவர் சங்கத்தினர் பொதுப்பணித்துறையில் மிகக்குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுத்து வெளி நபர்களுக்கு கொடுப்பதால், நாங்கள் அங்கு மட்டுமின்றி அதன் அருகே உள்ள பகுதிகளிலும் மீன்பிடிக்க முடிவதில்லை. வேறு இடங்களில் பிடிக்கும் மீனை, அந்தியூர் பகுதியில் விற்கவும் கூடாதென பலர் மிரட்டுகின்றனர். எனவே, வேம்பத்தி ஏரி, அதன் பகுதியில் உள்ள ஏரியை எங்கள் சங்கத்துக்கு முறையாக உரிமம் வழங்கி, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை