தேர்தல் ஆணைய குடோனுக்கு சென்ற கிழக்கு தொகுதி இ.வி.எம்., இயந்திரங்கள்
ஈரோடு, ஜன. 4-ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் இறந்ததால், தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.நேற்று முன்தினம் மாலை, தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ள அறையை, மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷ், துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் நேற்று காலை அங்கிருந்து, 1,190 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 238 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 340 விவிபேட் ஆகியவை முதற்கட்ட பரிசோதனைக்காக, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய கிடங்குக்கு கொண்டு வந்தனர்.இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:வரும், 6ல் பி.எச்.இ.எல்., பொறியாளர்கள் வந்து, இயந்திரங்களில் பதிவான ஓட்டு உள்ளிட்ட விபரங்களை அகற்றிவிட்டு, பழுது நீக்கம் செய்து, பேட்டரிகளை சரிபார்த்து தயார் செய்வர். பழுதான இயந்திரங்கள் இருந்தால் அவற்றுக்கு பதில் மாற்று இயந்திரங்கள் வைக்கப்படும். இவ்வாறு கூறினர்.