வீட்டை அபகரித்த பாசக்கார மகன் முதிய தம்பதி கலெக்டரிடம் மனு
ஈரோடு, ஈரோடு குமலன்குட்டையை சேர்ந்த கணேசன், 65, அவரது மனைவி, சரஸ்வதி 60, ஆகியோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு வழங்க வந்தனர். உடல் நலக்குறைவாக இருந்ததால், மனு எழுதும் இடத்தில் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தனர். அவர்களிடம் போலீசார் விபரம் கேட்டறிந்தனர். இதில் சரஸ்வதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, அவரை மட்டும் கலெக்டர் கந்தசாமியிடம் அழைத்து சென்று மனு வழங்க செய்தனர்.மனு வழங்கி மூதாட்டி கூறியதாவது: எனது மகன், எனது வீட்டை அவரது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி கொண்டார். என்னையும், கணவரையும் வீட்டைவிட்டு வெளியேற வற்புறுத்துகிறார். எங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.