ஓய்வு வங்கி மேலாளரிடம் ரூ.45 லட்சம் மோசடி எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் ஈரோட்டில் கைது
ஈரோடு, ஈரோடு, காசிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பாஸ்கர், 63; தனது சேமிப்பு பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ய எண்ணி, தனியார் பங்கு சந்தை செயலியில் டிரேடிங் கணக்கு தொடங்கினார். அந்த கணக்கில், 45.௫௮ லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். அந்த செயலி போலி என்பதால், பணத்தை மர்ம ஆசாமிகள், மோசடியாக இணைய வழியிலேயே பறித்து கொண்டனர். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில் மோசடி செய்யப்பட்ட, 45.58 லட்சம் ரூபாய், வட மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிந்து, அந்த கணக்குகளை கண்காணித்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அந்த வங்கி கணக்கு வைத்திருந்த திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த ராம்கியை, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, திருப்பத்துாரை சேர்ந்த சங்கர், 38, என்பவரை போலீசார், ஈரோட்டில் நேற்று கைது செய்தனர். எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது.சங்கர் தகவலின்படி ஈரோட்டை சேர்ந்த பிரதீப் வீட்டில் (தற்போது துபாயில் உள்ளார்), சோதனை நடத்தி ஒரு லட்சம் ரூபாயை கைப்பற்றினர். வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.