கத்திரிமலை கிராமத்தில் வாழும் 79 குடும்பங்களுக்கு மின் வசதி
மேட்டூர் : கத்திரிமலை கிராமங்களில் வசிக்கும், சோழகர் மலைவாழ் இனமக்களின், 79 குடும்பங்களுக்கு முதன்முறையாக மின்வசதி கிடைக்க, கம்பம் அமைக்கும் பணி நேற்று துவக்கியது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் ஊராட்சியில் உள்ள கத்திரி மலையில், 1,000 அடி உயரத்துக்கு மேல் மலையம்பட்டி, மாதம்பட்டி, ஈசல்பட்டி என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு சோழகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள், 79 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின் வசதி கிடையாது. தங்கள் வீடுகளுக்கு மின் வசதி வேண்டும் என கிராம மக்கள், பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கத்திரிமலை கிராமங்களுக்கு சேலம் மாவட்டம், காவேரிபுரம் ஊராட்சி, கத்திரிபட்டியில் இருந்து, 15 கி.மீ.,க்கு மலைப்பாதையில் மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக மக்கள் அடிவாரத்திலுள்ள கொளத்துாருக்கு வருவர். இந்நிலையில், கத்திரிமலை கிராமங்களுக்கு மின்வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கலெக்டர் கந்தசாமி, அந்தியூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ஈரோடு கிழக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் நேற்று கத்திரிப்பட்டிக்கு சென்றனர். அங்கு நடந்த விழாவில், 3.32 கோடி ரூபாய் செலவில், கத்திரிமலை கிராமங்களுக்கு, 15 கி.மீ., மலைவழி சாலையில், 271 மின்கம்பங்கள் அமைத்து, சோழகர் இன மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க, கம்பம் அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.