உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உதவித்தொகை பெறுவதில் சிக்கல் வறுமை கோடு எண் கேட்டு அலையும் முதியோர்

உதவித்தொகை பெறுவதில் சிக்கல் வறுமை கோடு எண் கேட்டு அலையும் முதியோர்

ஈரோடு: உதவித்தொகை மாதம், 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதால், வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்படும் முதியோர் விண்ணப்பிக்கும் போது, வறுமை கோட்டுக்கு கீழுள்ள எண்ணை கேட்டு அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.அ.தி.மு.க., தணீஞூ தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை மாதம், 1,000 ரூபாயாக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஜூன் முதல் தேதியில் இருந்து முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், முதிர் கன்னி என, அனைவருக்கும் உதவித்தொகை, 1,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. உதவித்தொகை பெற பலரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், 2001ல் எடுக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியல் எண் கண்டிப்பாக வேண்டும் என, அதிகாரிகள் கேட்கின்றனர்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் சென்று, முதியோர் கேட்கும்போது, 'பட்டியலில் உங்கள் பெயர் இல்லை' என்று கூறி விடுகின்றனர். சொந்த வீடு இல்லாததால், வேலை காரணமாக பல ஊர்களுக்கு இடம் மாறி செல்லும் இதுபோன்ற முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் வாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்த அளவில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ள இதுபோன்ற முதியோர், நகரப்பகுதியில் வீட்டு வாடகை அதிகம் என்பதால், கிராமப்புறங்களை நாடி செல்கின்றனர். அவர்கள் அங்கு வசித்து வருவது குறைந்த காலம் என்பதால், அவர்கள் பெயர் கண்டிப்பாக வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் இருப்பதில்லை. பஞ்சாயத்து தலைவரும், வி.ஏ.ஓ.,வும் கைவிரித்து விடுகின்றனர்.

ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: அரசு உத்தரவின்படி உதவித்தொகை பெற, 65 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் எந்த சொத்தும் இருக்கக்கூடாது. வேலை செய்ய இயலாதவராக இருக்க வேண்டும். மகன், மகள் ஆதரவும் இருக்கக்கூடாது. வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் எண் கண்டிப்பாக வேண்டும் என்பது அரசு உத்தரவு. அவர்கள் பெயர் பட்டியலில் இல்லாவிட்டாலும் கூட, உண்மையில் ஆதரவற்ற நிலையில் உள்ளனரா என்பதை கண்டறிந்து, நாங்களே வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் எண் பெற்று, உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். அதனால், உண்மையில் ஆதரவற்று கஷ்டப்படும் முதியோர், தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பித்தால், உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை