கூட்டுறவு வங்கி பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் தமிழக அரசு ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
காங்கேயம், 'தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், சிபில் ஸ்கோர் பார்த்த பிறகே, பயிர் கடன் கொடுக்க வேண்டும்' என்று, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அரசு ரத்து செய்ய, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்கள் என்பது விவசாயிகளின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டு நடந்து வருபவை. இதில் மத்திய, மாநில அரசுகள் ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, கூட்டுறவு சங்கங்களை தானே பொறுப்பேற்று சட்டப்படி நடத்த முடியாது. இந்நிலையில்தான் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை மாநில பதிவாளர், கடந்த மாதம், 26-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், 'விவசாயிகள் கடன் அட்டை (Kissan Credit Card) மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற, விவசாயிகளின் சிபில் ஸ்கோரை பார்த்த பிறகே கடன் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில்தான் பயிர் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த பயிர் கடன்களை, இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயித்துள்ளனர். உதாரணத்துக்கு நெல்லுக்கு ஒரு ஏக்கர் பயிர் செய்ய, 76 ஆயிரம் ரூபாய் தமிழக விவசாயிகளுக்கு செலவாகிறது. அரசோ, 36 ஆயிரம் மட்டுமே பயிர் கடனாக வழங்குகிறது. இதனால் கூடுதல் செலவுகளை சமாளிக்க, தேசிய வங்கிகளில் பயிர் கடன் பெறும் சூழல் ஏற்படுகிறது. இதுவும் போதாமல் வியாபாரிகள், இடைத்தரர்கள், உரக்கடைகளிடம் கடன் பெற்றுத்தான் விவசாயத்தை செய்து வருகின்றனர்.தேசிய வங்கிகளில் விவசாயிகளுக்கு சிபில் ரிப்போர்ட் பிரச்னை எழுந்துள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே புகலிடமாக உள்ளது. இங்கும் சிபில் ரிப்போர்ட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டால், தேசிய வங்கிகளிலும் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். நகை கடன்களுக்கான கட்டுப்பாடு போன்றதுதான் இதுவும். முன்பு மத்திய அரசு செய்ததை, மாநில அரசு தற்போது செய்துள்ளது. இந்த சிபில் ஸ்கோரால், விவசாயத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட போகிறது. கூட்டுறவு துறையின் சுற்றறிக்கையை ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.