2 நாளில் 42,273 வாக்காளர்களுக்கு படிவம் வழங்கல்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 2 நாளில், 42,273 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, இப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த, 4 முதல், டிச., 4 வரை நடக்கிறது. இம்மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில், 2,222 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடிக்கு தலா ஒரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், 10 ஓட்டுச்சாவடிக்கு ஒரு மேற்பார்வையாளர் என, 226 பேர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் என, 6,820 பேர் வாக்காளர்களிடம் படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று, 3வது நாளாக நடக்கும் பணி குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர்கணேஷ் கூறியதாவது:இம்மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதியில், 19 லட்சத்து, 97,189 வாக்காளர்கள் உள்ளனர். 2002ம் ஆண்டு சிறப்பு திருத்தப்படி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, டிச., 4க்குள் திரும்ப பெறப்படும். கடந்த, 2 நாளில் மட்டும், 42,273 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கி உள்ளோம். இதில் பிற மாநிலத்தவர், பிற விபரங்கள் என்ற அடிப்படையில் யாரையும் பிரித்து பார்க்க இயலாது. டிச., 4 வரை பெறப்படும் படிவத்தை விசாரித்து, டிச., 9 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினமே, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அவர்களது குடியுரிமையை உறுதி செய்து, பரிசீலனை செய்து பிப்., 7 இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்து வெளியிடப்படும்.தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிகளின்படி, படிவம் வழங்கி சேகரிக்கும் பணி, விசாரித்து சேர்க்கும் பணி நடைபெறும். நேற்று, 3வது நாள் என்பதால் சற்று வேகம் எடுத்துள்ளது. இவ்வாறு கூறினார்.