நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
பெருந்துறை,ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரியின், 27வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ரவிகுமார் வரவேற்றார். விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர், 87 மாணவ-மாணவியருக்கு, பதக்கம், பட்டம் வழங்கினர்.விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:வரும் டிசம்பர் மாதத்திற்குள் 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம், தமிழகத்தில் தொடங்கப்பட்டு, செயல்படுத்தவுள்ளோம். இத்திட்டம் மூலம், 1,256 முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஹிஸ்டரி சீட் வழங்கப்படும். அதை வைத்து தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோர், சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். தமிழககத்தில், ஈரோடு, திருப்பத்தூர், ராணிபேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புற்று நோய் ஸ்கேனிங் மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில், 365 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஈரோட்டில், 102 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதித்த, 19 பேரின் மாதிரிகளை சேகரித்து, புனே அனுப்பி பரிசோதனைக்கு அனுப்பியதில், வீரியம் இழந்தது என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை என்ற முடிவு வந்துள்ளது. இருப்பினும் முதியோர், கர்ப்பிணிகள், இணைநோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து செல்வது நல்லது. இவ்வாறு அமைச்சர் சுப்ரமணியன் பேசினார். விழாவில், 3.35 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. 8.15 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.