கடம்பூர், குன்றி, ஆசனுாரில் விடியவிடிய கனமழை திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
சத்தியமங்கலம், கடம்பூர், குன்றி மற்றும் ஆசனுார் மலை கிராமங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. திம்பம் மலைப்பாதையில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், தமிழகம்-கர்நாடகா இடையே பல மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு, 2:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, நேற்று காலை, 6:௦௦ மணி வரை தொடர்ந்து கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பை வனப்பகுதியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின. வெள்ள நீர் சத்தி நகராட்சி சூரிப்பள்ளத்தில் இரு கரைகளை தொட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் ஜீவா நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கடம்பூர் மலையில் மரங்கள் முறிவுஇதேபோல் கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால், கடம்பூர் செல்லும் வழியில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலை துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்திய பிறகு, நேற்று காலை, 11:20 மணிக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.திரும்பிய அரசு பஸ்குன்றி வனப்பகுதியில் கனமழையால் குன்றி செல்லும் வழியில் மாமரத்துபள்ளம், மாதேஸ்வரன் கோவில் பள்ளம் என இரு இடங்களிலும் தரைப்பாலம் உடைந்தது. இதனால் குன்றியில் இருந்து சத்தி வர வேண்டிய அரசு பஸ், செல்ல முடியாமல் வனப்பகுதியில் பாதியில் நின்றது. இதனால் பயணிகள் தவித்தனர். பஸ் மீண்டும் குன்றி மலை கிராமத்துக்கே திரும்பியது.திம்பத்தில் மண் சரிவுஆசனுார், திம்பம் மலையில் கொட்டிய மழையால், திம்பம் மலைப்பாதையயில், 7, 8, 20, 27 கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆசனுாரிலும், பண்ணாரியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். மண்ணை அள்ளி அப்புறப்படுத்தினர். இதனால் காலை, 11:00 மணி முதல் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்ல தொடங்கின.