பெருந்துறை அருகே கள்ளச்சாராயம் பிடிபட்ட கிராமத்தில் ஐ.ஜி., ஆய்வு
ஈரோடு: பெருந்துறை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மணியம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் கடந்த, 15ல் சோதனை நடத்தினர். இதில், 26 லிட்டர் சாராயம், 100 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக பெருந்துறை, சுள்ளிபாளையம், மணியம்பாளையம் தங்கராஜ் மகன் ஹரிஹரன், 27; பெருந்துறை, ஓலபாளையம், கனக்கம்பாளையம், மேட்டான்காட்டு தோட்டம் சின்னசாமி மகன் மகேந்திரன், 38, ஆகியோரை கைது செய்தனர்.இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள். கொரோனா காலத்தில் சமூக வலைதளத்தை பார்த்து, கள்ளச்சாராயம் காய்ச்ச கற்று கொண்டதாக தெரிவித்துள்ளனர். எத்தனை நாட்களாக இதில் ஈடுபட்டுள்ளனர், எங்கெல்லாம் விற்றவர்கள் என்பது தெரியவில்லை. தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று பிடித்ததாக, ஈரோடு மதுவிலக்கு போலீசார் கூறுகின்றனர்.இந்நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மணியம்பாளையத்தில், நேற்று ஆய்வு கொண்டார். ஏ.டி.ஜி.பி., (சட்டம்-ஒழுங்கு) உத்தரவின்படி, ஆய்வு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி., எச்சரித்தார். ஆய்வின்போது பெருந்துறை டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன் உடனிருந்தார்.அதிகபட்ச பறிமுதலால் ஆய்வுகள்ளகுறிச்சி கள்ளச்சாராய பலிக்கு பின், சாராய ஒழிப்பு நடவடிக்கை, தமிழகத்தில் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதேசமயம் மாவட்டத்தில், 26 லிட்டர் சாராயம், ௧௦௦ லிட்டர் ஊறல் ஒரே இடத்தில் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை. அதனால்தான் ஐ.ஜி., ஆய்வும் நடந்துள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.