உற்சாகத்தில் போட்ட ஆட்டம்; வாக்குவாதத்தால் சிறைவாசம்
பவானி, : ஈரோட்டை சேர்ந்த தம்பதியர் தமிழரசு, 34; காயத்ரி, 30; இருவரும் பவானி, வர்ணபுரத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன், 30; சபரி, 26, வீட்டுக்கு, செல்லியாண்டிம்மன் கோவில் விழாவையொட்டி சென்றிருந்தனர். நேற்று முன்தினம் அம்மன் அழைப்பு நிகிழ்ச்சி நடந்தது. இதில் நான்கு பேரும் கலந்து கொண்டனர். உற்சாக மிகுதியில் தமிழரசு-காயத்ரி சேர்ந்து நடனமாடியுள்ளனர். அப்போது திடீரென மனைவியை தமிழரசு தாக்கியுள்ளார். பாதுகாப்பு பணியிலிருந்த பவானி போலீசார் அதிர்ச்சி அடைந்து தடுத்தனர். தமிழரசோ, 'உங்களிடம் புகார் கொடுத்தோமா; எங்களை ஏன் கேட்கிறீர்கள்?' எனக்கேட்டு வாக்குவாதம் செய்ததுடன், போலீஸ்காரர் ஒருவரின் நெஞ்சில் கையை வைத்து தள்ளியுள்ளார். அங்கு வந்த குணசேகரன்- சபரி தம்பதியும், போலீசிடம் தகராறு செய்துள்ளனர். நான்கு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். நால்வர் மீதும் வழக்குப்பதிந்த நிலையில், தமிழரசு மற்றும் குணசேகரனை கைது செய்து, ஈரோடு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்கள் இருவரையும் ஜாமினில் விடுவித்தனர்.