மேலும் செய்திகள்
துவங்கியது ஜமாபந்தி; மனு கொடுக்க மக்கள் ஆர்வம்
21-May-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, 10 தாலுகாக்களிலும் நேற்று துவங்கியது.ஈரோடு தாலுகா அலுவலகத்தில், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, ஜமாபந்தி அலுவலராக இருந்து வருவாய் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்பம் வழங்கினார். நம்பியூர் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.* நம்பியூர் தாலுகா அலுலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில், கோசணம், கடசெல்லிபாளையம் பெரியார் நகரை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மக்கள், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு கொடுத்தனர். அதில், 'எங்களுக்கு, ௧995ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டாவை பத்திரமாக மாற்ற கொடுத்தால், பட்டா செல்லாதென அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை' என்று கூறியிருந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கலெக்டர் உறுதி அளித்தார்.* அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமையில், ஜமாபந்தி முகாம் தொடங்கியது. அம்மாபேட்டை பிர்காவில் அம்மாபேட்டை அ மற்றும் ஆ, கன்னப்பள்ளி, இலிப்பிலி, சென்னம்பட்டி, கொமராயனுார், புதுார், மாத்துார், வெள்ளித்திருப்பூர், நெரிஞ்சிப்பேட்டை, அரியாக்கவுண்டனுார் கிராமங்களுக்கு நடந்தது.இதில் பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை உள்பட, 127 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் கவியரசு, துணை தாசில்தார் திருமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.* கோபி தாலுகாவில் கோபி, சிறுவலுார், காசிபாளையம், கூகலுார், வாணிப்புத்துார் என ஐந்து உள்வட்டம் உள்ளது. இதில் காசிபாளையம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி முகாம், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமையில் துவங்கியது.இதில் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா, ஆக்கிரமிப்பு, நில அளவீடு என மொத்தம் 60 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.* பவானி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பழனிசாமி உட்பட பலர் மனு வழங்கினர். அதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிபந்தனையுடன் கூடிய நிலம், குறிச்சி மலையில் விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலத்தை மோகன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து, பத்து ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த இடத்தை மீட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.முகாமில், 60 மனு பெறப்பட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
21-May-2025