மகப்பேறு டாக்டரை நியமிக்க கடம்பூர் மக்கள் வலியுறுத்தல்
ஈரோடு;ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மகப்பேறு டாக்டரை நியமிக்க, கடம்பூர் மக்கள் முன் வைத்துள்ளனர்.நீலகிரி லோக்சபா தொகுதி, பவானிசாகர் தொகுதி சத்தி தாலுகாவுக்கு உட்பட்ட குத்தியாலத்துாரில், 19 ஆயிரம் பேர், குன்றியில், ௫,௦௦௦ பேர், கூத்தம்பாளையத்தில், ௩,௦௦௦ மலை கிராம மக்கள் வசிக்கின்றனர். இதில் கடம்பூர், பசுவனபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. குத்தியாலத்துாரில், 50 சிற்றுார், குன்றியில், 15 சிற்றுார், கூத்தம்பாளைத்தில், ஐந்து சிற்றுார் உள்ளது. இவ்விரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் சத்தியில் இருந்து தான் டாக்டர்கள் வந்து செல்கின்றனர். கடம்பூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மட்டுமே உள்ளது. 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ள மலைப்பகுதியில் ஒரு மகப்பேறு டாக்டர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை. விரைந்து மகப்பேறு டாக்டரை நியமிக்க மலை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இங்கு மக்கள் வசிக்கும் இடம் அனைத்துமே வனப்பகுதியாக உள்ளது. கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு அழைத்து செல்வது பெரும் இன்னலாக உள்ளது. 108 ஆம்புலன்ஸ் இப்பகுதியில் அவசர தேவைக்கு நிறுத்தி வைத்து இருப்பது மகிழ்ச்சி. அதே போல் பிரசவ கால ஊர்தி ஒன்றை இப்பகுதியில் நிறுத்தி பயன்பாட்டுக்கு விட வேண்டும். இப்பகுதியில் நிரந்தர மகப்பேறு டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும். அல்லது வாரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நாட்களாவது வந்து தங்கி கர்ப்பிணிகளுக்கு பிரசவத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை, பிரசவத்துக்கு பிந்தைய பேறு கால சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பலமுறை இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினர்.