தனியாக வசித்த பெண்ணிடம் தகராறு தலைமறைவாக இருந்தவர் கைது
பு.புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே, கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பெண்ணிடம், தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: புன்செய்புளியம்பட்டி அருகே புதுப்பாளையம் முத்து நகரை சேர்ந்தவர் கீதா, 40. கணவர் இறந்து விட்ட நிலையில் அதே பகுதியில் வசித்து வருகிறார். புளியம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., நகர செயலாளர் மூர்த்தி, 52, என்பவருடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, கீதா பிரிந்து விட்ட நிலையில் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி கீதா புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.மூர்த்தி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் மூர்த்தியின் நண்பர் ஜெகநாதன் என்பவருக்கு ஆடியோ பதிவு ஒன்று வந்துள்ளது. அதில் கீதா குறித்து, தகாத வார்த்தைகளால் பேசியதோடு பலருடன் தொடர்புபடுத்தி மிரட்டி உள்ளார். இந்த ஆடியோவை கீதாவிடம் சென்று ஜெகநாதன் தெரிவித்ததையடுத்து, விசாரணை நடத்தி, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட மூர்த்திக்கு கீதா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.இவ்வாறு கூறினர்.