மணமான பெண் கடத்தல்: 8 பேரிடம் விசாரணை
ஈரோடு, வெள்ளோடு வி.குட்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 23; பெற்றோருடன் தோட்டத்தில் வசிக்கிறார். மாட்டு பண்ணை நடத்தி வருகிறார். கல்லுாரியில் படித்த போது தாராபுரம் தாசர்பட்டி சரண்யா, 21, என்பவரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு தரப்பை சேர்ந்தவர்கள். சரண்யா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பவானியில் ஒரு கோவிலில் இருவரும் சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த நிலையில், இருதரப்பு வீட்டாரையும் போலீசார் அழைத்து பேசினர். இதில் சரண்யா, ராமகிருஷ்ணனுடன் சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன் அவரது பெற்றோருடன் இருந்தார். அப்போது காரில் வந்த சரண்யாவின் உறவினர்களான செல்வ வெங்கடேஷ், சதீஷ் குமார் குப்புசாமி, செல்வரத்தினம், சதீஷ்குமார், பிரித்வ் குமார், ராசு, கிருஷ்ண வேணி மற்றும் முத்துகுமார் ஆகியோர், கிரிக்கெட் மட்டை, சமையல் உபகரணங்களால் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை தாக்கி விட்டு சரண்யாவை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசில், ராமகிருஷ்ணன் நேற்று காலை புகார் செய்தார். போலீசார் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இது தொடர்பாக எட்டு பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.