மாயவர் கோவில் புரட்டாசி திருவிழா
ஈரோடு:விளகேத்தி அருகில் ஓலப்பாளையம் கிராமத்தில் நுாற்றாண்டு பழமையான மாயவர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு வழங்கப்படும் மடி சாதத்தை பக்தர்கள் சாப்பிட்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். மடி சாதத்தை ஆண்கள் மட்டுமே சமைப்பது தனி சிறப்பு. நடப்பாண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆண்கள் சட்டை அணியாமல் மண் பானைகளில் சாப்பாடு, சாம்பார், பொரியல், ரசம் தயாரித்தனர். பிறகு கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. விரதமிருந்து வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள், மடியேந்தி சாதம் (அன்னதானம்) பெற்று கொண்டனர்.