மேலும் செய்திகள்
அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டம்
15-May-2025
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளிடம், நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பவானிசாகர் அணை கட்டுமான பணிக்காக நிலம் வழங்கிய விவசாயிகள், தற்போது புதுப்பீர் கடவு, பட்ரமங்கலம், பசுவபாளையம், ராஜன்நகர், காந்திநகர், வடவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நீர் பாசன வசதி செய்து தரக்கோரி, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பவானிசாகர் நீர்வளத்துறை அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை செயற்பொறியாளர் அருளழகன் தலைமையில் நேற்று நடந்தது.இதில், எட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:பவானிசாகர் அணை கட்டி, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறவில்லை. மூன்று மாவட்ட விவசாயிகளின் பாசனம், குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நிலம் வழங்கியவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எங்களின் உரிமையான பாசன நீரை வழங்க திட்டம் நிறைவேற்ற வேண்டும். அணையில் இருந்து நீரேற்று முறையில் தண்ணீரை பம்பிங் செய்து ஏரி அமைத்து நீர்ப்பாசன வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து நீரேற்று முறையில் தண்ணீரை குட்டைகளுக்கு பம்பிங் செய்து, நீர்ப்பாசன வசதி செய்வது குறித்து அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றனர்.
15-May-2025