பிற உள்ளாட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
ஈரோடு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுடன், ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர்.* பவானிசாகர் யூனியன் நொச்சிகுட்டை பஞ்., - எம்.ஜி.ஆர்., நகர், பொன்மேடு ஆதிதிராவிடர் காலனி, கோவில்புதுார், ஆலாம்பாளையம், நல்லகாளிபாளையம், நல்லுார் பகுதி மக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது: நொச்சிகுட்டை பஞ்.,ல் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இப்பகுதி முழுமையாக விவசாய நிலம் சார்ந்தது. அங்கு கூலி வேலை செய்கிறோம். அரசின், 100 நாள் வேலை திட்டப்பணியை பெற்று வசிக்கிறோம். தற்போது புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன், இக்கிராமங்களை இணைக்க அறிவித்துள்ளனர். இதன் மூலம் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி பல மடங்கு உயரும். 100 நாள் வேலை திட்டப்பணி கிடைக்காது. எனவே, நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்.* ஈரோடு யூனியன் எலவமலை, செங்களாப்பாளையம், கதிரம்பட்டி பகுதியை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இதன் மூலம், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். 100 நாள் வேலை திட்டப்பணி பாதிப்பதுடன், அனைத்து வரியும் உயரும், என தெரிவித்துள்ளனர்.* அக்கரை கொடிவேரி பஞ்., சேர்ந்த மக்கள், கொடிவேரி டவுன் பஞ்., உடன் தங்கள் பஞ்சாயத்தை இணைக்கக்கூடாது. 100 நாள் வேலை திட்டப்பணிகளை இழக்க நேரிடும், என வலியுறுத்தியுள்ளனர்.