தமிழகத்தை வலுப்படுத்த இன்று முதல் மக்கள் சந்திப்பு
ஈரோடு, ஈரோட்டில், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் நடந்தது.ஈரோடு எம்.பி., பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தில் வீடு வீடாக பூத் கமிட்டி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் சென்று மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டியவற்றை வழங்காததால், நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தெரிவியுங்கள். அங்கிருப்போரை உறுப்பினராக்குங்கள். மகளிர் இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை மாதம், 1,000 ரூபாய், காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம் என அத்தனை திட்டங்களும் எந்த மாநிலத்திலும் இல்லாமல், தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.இன்று காலை, 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஒவ்வொரு பூத்திலும், 1,000 ஓட்டு இருந்தால், அப்பகுதியில், 500 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் வீடாக இருந்தாலும், அங்கும் உண்மையை கூறுங்கள். அவர்கள் கூறும் குறைகளையும் கேட்டு தெரிவியுங்கள். இம்முயற்சி தி.மு.க.,வை வலிமையாக்க அல்ல; தமிழகத்தை வலிமையாக்கத்தான் என்பதை உறுதிப்படுத்துங்கள். இயக்கம் நிறைவடையும்போது, குறைந்தபட்சம் தெற்கு மாவட்டத்தில், 3, 4 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.மேயர் நாகரத்தினம், மாநகர செயலர் சுப்பிரமணியம், இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.