பாரதியார் பல்கலை மையத்தில் சேர்க்கை கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அமல் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு தினேஷ், நரேந்திர பிரசாத் உட்பட பலர் பேசினர்.ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலை விரிவாக்க மையத்தில் ஆண்டுக்கு, 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்து படிக்கின்றனர். கடந்த சில ஆண்டாக பல்கலை நிர்வாகம், மையத்தை செயல்பட விடாமல் செய்வதுடன், மூடும் முடிவை எடுத்துள்ளனர். இதனால் மையத்தில் இந்தாண்டுக்கான சேர்க்கையை நிறுத்தி வைக்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இங்கு சேர விரும்புவோர், குறிப்பிட்ட நாட்களுக்குள் சேர வாய்ப்பில்லாத நிலையில், வேறு கல்லுாரிகளில் சேர்ந்து விடுவர். அதன் பின் சேர்க்கையை அறிவித்து, 'யாரும் வரவில்லை' என கூறுவதை வாடிக்கையாக்குவதை கைவிட வேண்டும். இம்மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.