உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி-மேட்டூர் சாலை நடராஜபுரத்தில் ஒழுங்கின்றி கட்டிய கான்கிரீட் வடிகால் அகற்றம்

பவானி-மேட்டூர் சாலை நடராஜபுரத்தில் ஒழுங்கின்றி கட்டிய கான்கிரீட் வடிகால் அகற்றம்

பவானி: பவானி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில், ஈரோடு- பவானி- மேட்டூர் -தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. இதில் தற்போது சாலையோரங்களில் கான்கிரீட் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபாதை கட்டுமான பணி நடந்து வருகிறது. தாறுமாறாகவும், ஒழுங்கின்றியும், தரமற்றும் பணி நடப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதை கண்டுகொள்ளாமல் கட்டுமான நிறுவனம் பணியை தொடர்ந்தது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பவானி, நடராஜபுரம் அருகே மேட்டூர் சாலையில் ஏற்கனவே உள்ள சிறுபாலத்துடன், கழிவுநீர் கால்வாய் இணைப்பு பணி முடிக்கப்பட்டன.சிறுபாலத்தில் கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வகையில் நேராக இணைக்காமல், பாதியளவுக்கே இணையும் வகையில், கான்கிரீட் வடிகாலும், மூடுபாதையும் கட்டப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவித்தனர். இதனால் மக்கள் பார்வையில் படாமல் இருக்க, தடுப்பு வைத்து மூடப்பட்டது. நேற்று இந்த தடுப்புகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, கான்கிரீட் வடிகால் முறையாக கட்டப்படாதது அம்பலமானது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் தொழிலாளர்களும் பணியை தொடர்ந்தனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள், சாலைபணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., வாகனத்தை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இதை தொடர்ந்து ஒழுங்கின்றி கட்டப்பட்ட கான்கிரீட் வடிகாலை அகற்றி, மீண்டும் கட்டித் தருவதாக ஒப்பந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர். இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உறுதி செய்தனர். இதன்படி சில நாட்களுக்கு முன் கட்டப்பட்ட கான்கிரீட் வடிகால், மூடுபாதை இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை